சென்னை:
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முப்பருவ கல்வித் திட்டத்துக்கு எடப்பாடி அரசு மூடு விழா நடத்தி உள்ளது. 5ம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
மோடி அரசின் பினாமியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டனர். பல மாநிலங்களில் தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர்; பாடங்களும் நடத்தப்படவில்லை. அதனால் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு வரும் போது தங்கள் தாய்மொழியில் கூட எழுத படிக்கத் தெரியாமல் இருந்தனர்.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் தேர்வு நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்யவும் சலுகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
இதையடுத்து, ஜெயலலிதா மாணவர்களின் நலன் கருதி கொண்டு வந்த முப்பருவ பாட முறை எட்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஜெயலலிதா அரசு என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசு, ஜெ. கொண்டு வந்த கல்வி முறைக்கு மூடுவிழா நடத்தி உள்ளது.
இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே அந்த வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும். இந்த பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும். எனவே மூன்று பருவ பாடங்களுக்கும் ஆண்டின் இறுதி வரை ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.