சென்னை:

த்திய பாஜக அரசின் பொருளாதாரப் பேரழிவுகளை மக்களிடம் கொண்டு செல்கிற வகையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 15 -ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதை கண்டித்து,  நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைமை பகுதிகளில் இந்த போராட்டங்கள் நடைபெறும் என்றும்,  நவம்பர் இறுதி வாரத்தில் நாடு தழுவிய பெரிய அளவிலான போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அக்டோபர் 31ந்தேதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து விளக்குவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை செயலாளர் திருமதி. சுப்ரியா ஸ்ரீநேட் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கினார்.

அதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் பொருளாதாரம் இன்று அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம், வேளாண்மை ஆகியவற்றின் வளர்ச்சி ஊசலாடுவதால் ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’ கோமா நிலைக்குப் போய்விட்டது. மூழ்கும் பொருளாதாரம், சுருங்கிவிட்ட சேமிப்புகள், முடங்கிப் போன தொழில் வர்த்தகம், காலைச் சுற்றிய பாம்பு போல ஆகிவிட்ட வங்கி முறைகேடுகள் ஆகியவை பாஜக ஆட்சியில் பொருளாதாரத்தின் அவல நிலையைப் பிரதிபலிக்கின்றன. பாஜக அரசு ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவின் நலன்களை விற்று வருகிறது. நமது நிதி சுதந்திரத்தையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சிதறடிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் அவசர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை நிலையாகும். ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல மண்டல ஒருங்கிணைந்த பொருளாதாரக் கூட்டு என்ற பெயரில் சீனா மற்றும் 15 நாடுகளுடன் மிகப் பெரிய தாராள வர்த்தக உடன்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் கையெழுத்திடு கிறார். இதன் மூலம் சீனா மற்றும் வெளிநாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் குவிப்பதற்கான சந்தையாக இந்தியாவை மாற்றப் போகிறார்.

1. வேலையில்லாத் திண்டாட்டம்:

பாஜக அரசு இந்தியாவின் மக்கள் தொகையை மக்கள் சக்தியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்கள் சீரழிவாக மாற்றப் போகிறது. தேசிய மாதிரி புள்ளி விவர அலுவலகத்தின் தகவலின்படி வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. அது இன்னும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில் வேலையில்லாதோர் 4.95 சதவீதம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

உலக அளவில் மொத்த வேலையில்லாதோரின் விகிதத்தை விட இரு மடங்கு இந்தியாவில் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. அதிகமானோர் எழுத்தறிவு பெற்றுள்ள நிலையிலும் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. பட்டதாரிகள் முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரையில் அதிக அளவாக, அதாவது 15 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். கல்வி நிலையோ மிகவும் மோசமாக இருக்கிறது. 18 வயது முதல் 23 வயது வரையான இளைஞர்களில் 74 சதவீதம் பேர் கல்லூரியில் படிக்கச் செல்வதில்லை. அதை விட மோசம் வெறும் 2.5 சதவீதக் கல்லூரிகள் மட்டுமே பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை நடத்துகின்றன. உண்மையில் கல்வியின் கட்டமைப்பையும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான வழிகளையும் பாஜக அரசு சிதைத்துவிட்டது என கூறலாம்.

2. மூழ்கும் பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரத்தில் இக்கட்டான நிதி நிலையை உருவாக்கி நிதிச் சீரழிவு ஏற்படுவதற்கு பாஜக அரசே முழுப் பொறுப்பு. உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆறாண்டுகளை விட மந்தமாக உள்ளது. புள்ளி விவரம் என்ற பெயரில் செப்படி வித்தையைக் காட்டினாலும், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் எப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக 5 சதவீதம் என்று உள்ளது. பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்), உலக வங்கி ஆகியவற்றுடன் இந்திய ரிசர்வ் வங்கி உள்பட அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சி குறைகிறது என்று கணித்துள்ளன. உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதிய தனியார் முதலீடுகள் கடந்த 16 ஆண்டுகளில் மிக மோசமான அளவுக்குக் குறைந்துவிட்டன. வீட்டுச் சேமிப்புகளின் அளவு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் கீழே தள்ளப்பட்டு உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சேமிப்பு விகிதம் 34.6 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி 1.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழாண்டுகளில் மிகக் குறைவாகும். எனவே உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2014 -ம் ஆண்டு அக்டோபர் முதல் மிக மிகக் குறைவாக, அதாவது மைனஸ் 1.2 சதவீதமாக இருக்கிறது. முக்கியத் துறைகளின் வளர்ச்சி நான்கு ஆண்டுகளிலேயே மிகவும் குறைவாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி 6.6 சதவீதம் குறைந்துவிட்டது.

29 பெரிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, தற்போது 21 பொருள்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது ஏற்றுமதி அளவில் 66.4 சதவீதமாகும். இவற்றின் ஏற்றுமதி ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. மூலதனப் பொருட்களின் வளர்ச்சி 2012 ஏப்ரல் முதல் எதிர்மறையாக அதாவது மைனஸ் 21 சதவீதமாகக் குறைந்துவிட்டது. மின்துறையின் வளர்ச்சியும் இதைப் போல் எதிர்மறையாக மைனஸ் 0.9 சதவீதம் குறைந்துவிட்டது. இது 2013 பிப்ரவரியில் இருந்ததை விட மிகவும் குறைவான அளவாகும். பயணிகள் வாகன விற்பனை கடந்த செப்டம்பர் வரையிலான தகவலின்படி முன் எப்போதும் இல்லாத வகையில் 23.7 சதவீதம் குறைந்துவிட்டது. வங்கிகளின் வாராக் கடன்கள் ஏற்கெனவே ரூ.8 லட்சம் கோடியை எட்டிவிட்டது. கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் 25 ஆயிரம் வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இதில் ரூபாய் 1லட்சத்து 74 ஆயிரத்து 225 கோடி அளவுக்குப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை. மாறாக பாஜக ஆட்சியில் வங்கி மோசடியாளர்கள் பாதுகாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பொதுப் பணத்தைச் சுரண்டுவோர் பணத்தோடு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர் என்பதுதான் யதார்த்தம் என கூறப்படுகிறது. மோசமான நிதி விவகாரங்கள் ஒருபுறம் இருக்க 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு குறையப் போகிறது. 2018-19 ஆம் ஆண்டிலும் ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரம் கோடி துண்டு விழுந்துள்ளது. பாஜக அரசு ஒரு புறம் 30 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரிகளை 15 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையில் குறைத்திருக்கிறது. மறுபுறம் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூலை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கவில்லை.

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 4 சதவீதமாக இருக்கும் என்றும் செலுத்தப்படாத பில் தொகையான ரூ.10 லட்சம் கோடியையும் சேர்த்தால், மொத்த நிதி பற்றாக்குறை 8 சதவீதமாகும் என்றும் உறுதியாகத் தெரிகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அவசர சேமிப்பில் இருந்து நிதியைப் பெற்றதிலிருந்தே பொருளாதாரத்தின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது தெரிகிறது. இந்த நிதி மிக மிக அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியில் உபரி நிதியாக உள்ள ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பாஜக அரசு எடுத்துக் கொண்டுள்ளது. 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளில் ஒட்டுமொத்த பணப் பரிமாற்றமாக ரூபாய் 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 89 ஆயிரம் கோடி ஆகும். 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கத்தை வெளிச்சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி முதன்முறையாக விற்றுள்ளது. இந்திய ரூபாய்க்கு பொருளாதார நிலைத்தன்மையை வழங்குகிற ஒரே நிறுவனமாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கி அரசியல் காரணங்களுக்காக கொடூரமான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

3. விவசாயிகளுக்கு அநீதி:

விவசாயத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வெறும் 2 சதவீதம் குறைந்துவிட்டது. விவசாயத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் எம்.எஸ்.பி. அதற்கான செலவில் 50 சதவீதமாக சேர்த்து வழங்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு மாறாக விவசாயிகள் சந்தை விலையையே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நடப்பு சம்பா சாகுபடி பருவத்தின் விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகவும் குறைவாக 8 சதவீதம் முதல் 37 சதவீதம் வரையில்தான் கிடைக்கிறது. அதாவது சராசரியாக 22.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. துவரை, உளுந்து, பயறு, சோயா, சூரியகாந்தி, எள், கடலை, கம்பு,கேழ்வரகு ஆகிய தானிய வகைகளைப் பயிரிடும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. ஈர நெல்லுக்குக் கிடைக்கும் குவிண்டாலுக்கு ரூ.1,835 குறைந்தபட்ச ஆதரவு விலை எம்.எஸ்.பி. பெறும் விவசாயிகள், அதில் ரூ.200 குறைவாகப் பெற்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு நடப்பு சம்பா பருவத்தில் மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் உரங்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி, டிராக்டர், வேளாண் உபகரணங்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரி, பூச்சிக்கொல்லி மருந்தின் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. டீசல் உள்ளிட்டவற்றின் மீது மத்திய கலால் வரி, சுங்க வரி மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி ஆகிய சுமைகளால் விவசாயிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் குறைந்தபட்ச ஆதரவு விலை குறைப்பு, மறுபுறம் அதிகமான வரிச் சுமைகள் என்று ‘மத்தளத்துக்கு இருபுறமும் அடி’என்பதைப் போல் விவசாயிகள் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். விவசாய ஏற்றுமதி வேறு குறைந்துள்ள நிலையில் விவசாயிகளின் நிலை மோசமாகி வருகிறது.

2014 ஆம் ஆண்டில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியில் அமர்ந்த நரேந்திர மோடி அரசு எதையும் நிறைவேற்றாமல் மக்களிடையே வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி, திசை திருப்பி, மக்கள் ஆதரவோடு மீண்டும் 2019-ல் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பாஜக ஆட்சியின் தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதாரப் பேரழிவை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் வருகிற நவம்பர் 5 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருந்தன. அதன்படி மத்திய பாஜக அரசின் பொருளாதாரப் பேரழிவுகளை மக்களிடம் கொண்டு செல்கிற வகையில் தமிழகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, மக்கள் ஆதரவைத் திரட்டுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.