டில்லி
சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு குறித்து அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் குப்தா தனது தொலைப்பேசி மற்றும் குடும்பத்தினர் தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஐயம் கொண்டார். சத்தீஸ்கர் மாநில அரசு குறிப்பாக அம்மாநில முதல்வரின் உத்தரவுக்கு இணங்க இது நடைபெறுவதாக அவருக்குச் சந்தேகம் எழுந்தது.
ஆகவே அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற அமர்வு, “தற்போது நாட்டில் ஏன் இவ்வாறு நடக்கிறது? யாருக்கும் தற்போது தனியுரிமை இல்லாத நிலை உள்ளது? ஏன் இவ்வாறு தனியுரிமை மீறல் நடைபெறுகிறது?
எந்த ஒரு அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி முகேஷ் குப்தாவின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்க அவருக்கு தெரியாமல் அனுமதி அளிக்கப்பட்டது? இத்தகைய உத்தரவை அளித்தது யார்? இந்த உத்தரவுக்கான காரணம் குறித்து விரிவான விளக்கத்தை மாநில அரசு அளிக்க வேண்டும்
இந்த வழக்கை தொடர்ந்த மகேஷ் ஜெத்மலானி மீதும் எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. அந்த எஃப் ஐ ஆர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில அரசை உச்சநீதிமன்றம் இவ்வாறு கடிந்துக் கொண்டது சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.