டில்லி
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசியதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டணி ஆட்சிக்கு எதிராக் வாக்களித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
சமீபத்தில் கர்நாடக முதல்வர் ஹப்பள்ளியில் பாஜக கூட்டத்தில் பேசிய போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான் தமது அரசு அமைய உதவியதாகவும் இது பாஜக மூத்த தலைவர் அமித்ஷா முன்னின்று நடத்தினார் எனவும் தெரிவித்தார். அத்துடன் இந்த 17 பேரும் தேர்தலில் போட்டியிடும் போது இவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சின் ஆடியோ பதிவு வெளியாகி வைரலானது.
இதையொட்டி காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள மனுவில், “முதல்வர் எடியூரப்பா தனது கட்சியினரிடம் அதிருப்தி உறுப்பினர்கள் அமித்ஷாவின் உத்தரவுப்படி வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார். இது சட்ட விரோதமானது. எனவே இவர்களது தகுதி நீக்க வழக்கில் எடியூரப்பாவின் பேச்சை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என முறையிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரிப்பது குறித்து நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் ஆலோசனை நடத்த உள்ளது.