சென்னை

மிழக போக்குவரத்து காவல்துறையினர் அளிக்கப்படும் ரசீதுகளில் இந்தி இடம் பெற்றுள்ளது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

சென்னை நகரில் தற்போது பல இடங்கள் போக்குவரத்து காவல் துறையின் தானியங்கி காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.   இந்த பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு வண்டியின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.   அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு  அபராத ரசீதுகள் அனுப்பப்படுகின்றன.

வழக்கமாக இந்த ரசீதுகள் ஆங்கில மொழியில் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கும்.  தற்போது இந்த ரசீதுகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளன.   இந்த ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  தமிழக காவல்துறை அதிகாரிகள் இது குறித்து தங்களால் தடுக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.  மத்திய அமைச்சர் அமித் ஷா கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனக் கூறியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.