டெல்லி: பயிற்சியின்போது ஸ்டார் பேட்ஸ்மெனும், பொறுப்பு கேப்டனுமான ரோகித் சர்மா காயம் அடைந்ததால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அதையொட்டி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா, சக வீரர்களுடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அவருக்கு ஒரு முனையில் இருந்து இலங்கையின் இடதுகை பவுலர் நுவான் சேன வீரரத்னே பந்து வீசினார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை பெறவே அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
அவர் வேகமாக வீசிய பந்து, ரோகித்தின் இடதுபுறம் வயிற்றின் மீது தாக்கியது. அலறிய அவர், வலியுடன் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு, அவர் மீண்டும் பயிற்சி களத்துக்கு வரவே இல்லை. அதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம் அடைந்தார். அவரை பின்னர் மருத்துவ குழு தீவிரமாக பரிசோதித்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு அவர் முழு தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.