புபனேஷ்வர்: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் சிறப்பாக செயல்பட்டு, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்களின் வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளன.
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி 5-1 என்ற கணக்கில் அமெரிக்காவையும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4-2 என்ற கணக்கில் ரஷ்யாவையும் வீழ்த்தின.
ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கிப் பிரிவில் மட்டும் மொத்தம் 12 அணிகள் பஙகேற்கும். இவற்றில், ஜப்பான், அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன.
தற்போதைய நிலையில் இந்தியப் பெண்கள் அணி 9வது இடத்திலும், அமெரிக்க அணி 13வது இடத்திலும் உள்ளன. இந்தியப் பெண்கள் அணியில், ஆட்ட நாயகி விருதை கேப்டன் ராணி ராம்பால் வென்றார்.
ஆண்களுக்கான ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியிலும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும். இதில், ஏற்கனவே ஜப்பான், அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வெற்றியோடு சேர்த்து, அடுத்து ஆடவுள்ள போட்டியிலும் வெற்றிபெற்றால், ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதிபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.