சென்னை: உள்ளாட்சி தேர்தலிலும் பாமக கூட்டணி தொடர்ந்தால், எத்தனை இடங்கள் ஒதுக்குவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.

சென்னை எழும்பூரில், செங்கல்வராய நாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மாணவர்களுக்கு இருவரும் மடிக்கணினிகளை வழங்கினர். அப்போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

2011ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 3 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதே அரசின் நோக்கம் என்றார்.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனா் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

அவருடன் பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி, முன்னாள் மத்திய இணையமைச்சா் ஏ.கே.மூா்த்தி ஆகியோரும் வந்தனா். அவா்களை அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வரவேற்றனா்.

அண்மையில் முதலமைச்சரின் மாமனார் காளியண்ணன் காலமானார். அவா் மறைவுக்காக ராமதாஸ் இரங்கல் தெரிவித்தார்.