மதுரை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாணவனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 மாணவர்கள் உள்பட அவர்களின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஏற்கனவே சில மாணவர்கள் ஜாமின் பெற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டிருந்த திருப்பத்தூர் மாணவன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவில், அதில், நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தன்னிடம் மேற்கொண்ட விசாரணயின் பெரும்பகுதி முடிவடைந்து விட்டதாகவும், மேற்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க தான் தயாராக இருப்பதாகவும், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீட் ஆள்மாறாட்டம் முறைகேடுக்கு மாணவரின் தந்தையே காரணம் என விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், மாணவனின் தந்தை ஜாமீன் மனுவையும் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.