சென்னை
வரும் 2050க்குள் சென்னை நகரின் பல பகுதிகள் கடல் நீர்மட்ட உயர்வால் கடலில் முழுகும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வறிக்கையில் பருவ நிலை மாற்றம் காரணமாகக் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது. இந்த அறிக்கையில் உலக அளவில் பல நகரங்கள் குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்தியாவில் மும்பை நகர் குறித்து மட்டும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எனவே மற்ற நகர வாசிகள் சற்று நிம்மதியுடன் இருந்தனர்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் சென்னை நகர்ப் பகுதியிலும் கடல் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடற்கரை ஓரமாக உள்ள பகுதிகள் மட்டுமின்றி உள்ளே இருக்கும் பகுதிகளும் முழுகும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2050 ஆம் வருடத்துக்குள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகள் முழுவதுமாக முழுகும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடலுக்கு மிக அருகில் உள்ள மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகள் பத்திரமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடல் நீர்மட்டம் அதிகரிக்க முக்கிய காரணம் உலகம் வெப்ப மயமாகி வருவதே ஆகும். இது பொதுவாக கார்பன் வெளியீடு மூலம் அதிகரித்து வருகிறது. எனவே சென்னை நகரில் அதிக கார்பன் வெளியீடு உள்ள பகுதிகள் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடல் நீரில் முழுகும் அபாயம் குறித்த அறிவிப்புக்கள் ஒரு எச்சரிக்கை அல்ல எனப் பல விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோ, “கடல் நீர் மட்டம் வருடத்துக்கு3 மீமீ உயர்ந்து வருகிறது. அந்த விகிதப்படி பார்த்தால் 30 வருடங்களில் 9 செமீ வரை மட்டுமே உயர வாய்ப்புள்ளது. சுமார் 100 வருடங்களில் அது 20 மீட்டர் நிலப்பரப்பை முழுக அடிக்கலாம். எனவே இது அச்சமடையும் விஷயம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.