புதுடில்லி: லட்சக்கணக்கான துணை ராணுவப் படைவீரர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள், வருடத்தில் 100 நாட்கள் குடும்பத்துடன் தங்குவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்யவேண்டி அதன் தலைமை இயக்குநர்களைக் கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

முன்னதாக, உள்துறை அமைச்சகம், மத்திய காவல் படையில் உள்ளோர், அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதூரத்திற்குப் பணிக்காக செல்வதால் அடையும் கஷ்டங்கள் குறித்துக் கவலை தெரிவித்திருந்த நிலையில் இந்நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோன்றே, உள்துறை அமைச்சர், பணியுத்தரவில் இருக்கும் படையினரைப் பற்றிய விவரங்களை கணினிமயமாக்குதலுக்காக மென்பொருள் ஒன்றை உருவாக்கி பயன்படுத்தினால், சிலர் தங்கள் குடும்பத்துடன் 100 நாட்கள் விடுமுறைக்குச் செல்லும்போது மற்றவர்கள் பணியில் இருப்பதையும் உறுதிசெய்ய முடியுமென கூறினார்.

உள்துறை அமைச்சகம், மத்திய காவல் படையின் அனைத்துப் பிரிவுகளின் அதிகாரிகளுக்கும் அமித்ஷாவின் இந்த உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் மேற்கொள்ள அக்டோபர் 10 அன்று கடிதம் அனுப்பியுள்ளது.