ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்களை, போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி SMPP நிறுவனம் இன்று இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த SMPP பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் அனில் ஓபராய், “முதலாம் ஆண்டில் 36,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்க நாங்கள் திட்டமிட்டுருந்தோம். ஆனாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ராணுவத்திற்கு 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். 2021ம் ஆண்டுக்குள் 1.8 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். ஆனால் அதை 2020ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே வழங்கி சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முக பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே 47 ரக துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருத்துகளை தாங்கும் சக்தி கொண்டதாகும். ஒரு வீரரை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கக்கூடிய அளவில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.