நாகலாந்து: நாகலாந்தில் வருடந்தோறும் மிஸ்.கோஹிமா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வருடம் இதில் வெற்றி பெற்ற ஒரு பதினெட்டு வயது பெண் மிகவும் தைரியமாக கூறிய கருத்து அரங்கத்தை அதிரச் செய்தது மட்டுமின்றி அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும் இருந்தது.
இம்மாதம் 5ம் தேதி நாகலாந்தில் நடைபெற்ற மிஸ். கோஹிமா அழகிப்போட்டியில் விக்குவானோ சச்சு 3வது இடத்தைப் பிடித்தார். அப்போது ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் தான் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி அங்கிருந்த பார்வையாளர்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது.
போட்டியின் இறுதிக்கட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்கப்படும் கேள்வி-பதில் பகுதியில்தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இவ்வாறான பதில்கள் யாரும் சொல்வதற்கு அஞ்சுகின்ற ஒன்றாகும். ஆனால், இவரோ துணிந்து கூறி அதற்காகக் கைத்தட்டலையும் பெற்றுள்ளார்.
அவரிடம் கேட்கப்பட்ட அக்கேள்வியானது, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உங்களை அவருடனான ஒரு உரையாடலுக்கு அழைத்தால் நீங்கள் என்ன கூறுவீர்கள்?“ என்பதாகும். அதற்கு அவர் சிறிதும் தயங்காமல், நான் அவரிடம், “நீங்கள் உங்கள் கவனத்தை பசுக்களின் மீது செலுத்துவதை விட்டுவிட்டு பெண்கள் மீது செலுத்துங்கள் என்பேன்“ எனக் கூறினார்.
18 வயதே நிரம்பிய அப்பெண்ணின் அதிரடி பதிலால் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்ட போதும் அரங்கில் இருந்த அநேக பார்வையாளர்களை அவர் தமது தைரியமான பேச்சால் கவரவே செய்தார்.