பீஜிங்
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆப்பிள் நிறுவன செயலி உதவி வருவதாகச் சீன அரசிதழ் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 1997 ஆம் வருடம் பிரிட்டன் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை சீனாவுக்கு அளித்தது. அதனால் சீனாவின் வர்த்தகம், சுற்றுலா ஆகியவை மிகவும் மேம்பட்டது. சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குச் சீனாவுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது முதல் அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. சீனாவுக்கு குற்றவாளிகளை அனுப்பும் முடிவு தற்போது ஒத்திவைக்கப்பட்ட போதிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹாங்காங்கில் காவல்துறையினர் இருக்கும் இடம் குறித்து அறிய ஆப்பிள் நிறுவனம் ஒரு செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
மக்களின் அவசரத் தேவைக்கு காவல்துறை இருக்குமிடம் தெரிந்து உதவி கோர வகை செய்யும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. சீன அரசு இந்த செயலிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான மக்கள் தினசரி என்னும் பத்திரிகை அரசிதழாகவே கருதப்பட்டு வருகிறது.
அந்த நாளேட்டில், “ஆப்பிள் அங்கீகரித்துள்ள இந்த செயலி போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கிறதா? இந்த செயலி மூலம் போராட்டக்காரர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் காவல்துறையினர் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை அளிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது செயலி மூலம் ஹாங்காங்கில் அமைதியின்மையைத் தூண்டுகிறது. அந்நிறுவனம் வர்த்தகத்துடன் அரசியலையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஆதரித்து வருகிறது. இது போன்ற புத்திசாலித்தனமற்ற மற்றும் தவறான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆப்பிள் நிறுவனம் யோசிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]