திருமலை:
புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, கோவை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் திருமலை திருப்பதியில், நாளை 5 மணி நேரம் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருப்பதி வெங்கடேச பெருமானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி பிரமோற்சவம் விமரிசையாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு பிரமோற்சவம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யும்பணி நாளை , செவ்வாய்க்கிழமை (செப். 24) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயிலை சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், தொடர்ந்து ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி வெங்கடேஷபெருமானுக்கு ஆண்டுக்கு 4 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், புரட்டாசி வருடாந்திர பிரம்மோற்சவம்.
இந்த பிரமோற்சவங்களுக்கு முன்னதாக கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதும் வழக்கம்.