மைசூரு

ர்வதேச அளவில் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வரும் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

கிபி 1610-ம் ஆண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் போரில் வென்றதைக் கொண்டாடும் வகையில் தசரா விழா தொடங்கப்பட்டது.  அதற்குப் பின்னர் மைசூருவை ஆண்டுவந்த உடையார் மன்னர்களால் நவராத்திரி விழாக் காலத்தில் தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் சார்பில் மைசூரு தசரா மாநில விழாவாக பிரம்மாண்டமாக நடை பெற்று வருகிறது.

இந்த வருடம் 409- வது ஆண்டு தசரா விழா வரும் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.   தசரா விழாவின் தொடக்க நாளான 29-ம் தேதி எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மைசூரு மன்னர் குடும்பத்தின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து, தசரா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

மைசூரு நகரில் தசரா திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இளைஞர் தசரா, விளையாட்டு தசரா, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, உணவு தசரா, திரைத்துறை தசரா என வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு தசராவை பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தொடங்கி வைக்கிறார்.  அத்துடன் திரைத்துறை தசராவை முன்னிட்டு சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு நகரில் உள்ள அரண்மனை, ஆட்சியர் அலுவலகம், பாரம்பரிய கட்டிடங்களைச் சுத்தப்படுத்தி, அழகூட்டும் பணிகள் நடந்து வருகின்றன.  தசராவையொட்டி அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தர்பார் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந்த தசரா திருவிழாவின் இறுதி நாளான ஜம்போ சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக அர்ஜுனா, ஜனார்த்தனா உள்ளிட்ட 14 யானைகள் மைசூரு நகர வீதிகளில் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பன்னி மண்டபத்தில் நடைபெறும் தீப்பந்த விளையாட்டுக்கான ஒத்திகையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக தசரா விழாவில் நடைபெறும் கர்நாடக கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதையொட்டி தமிழகக் கலைஞர்கள் பறையாட்டம், புலி ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவைக்கான ஒத்திகைகளை நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய உணவு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.