சென்னை:
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குனேரி, மற்றும் புதுச்சேரி காமராஜர் நகரி, போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ஆதரிக்கும் என்று அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர்நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி திங்கள் கிழமை அன்று இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரும், நாங்குனேரி யில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரும் நிறுத்தப்படுவார்கள் என கூட்டணியின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
அதோடு புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கூட்டணி கட்சியினரும் இந்த இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவதற்கு அனைத்து வகைகளிலும் ஈடுபடுவதும், பாடுபடுவதும் கடமையாக கொண்டிருக்கிறார்கள்.
திமுக தலைவர் தளபதியார் அறிவித்திருப்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்று இடைத்தேர்தலில் அவரின் தலைமையிலான கூட்டணி வெற்றிகளை குவிக்க வாழ்த்து தெரிவிக்கிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக் கூட்டணி என்னும் வரலாற்றை உருவாக்கி புதிய வரலாறு படைத்திருக்கிறது. அதே வரலாறு இந்த இடைத் தேர்தல்களிலும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமில்லை. மத்தியில் ஆளும் அரசின் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த கொள்கைகளை தமிழகத்திலும் அரங் கேற்ற தமிழகத்தில் ஆளும் அரசு எல்லா வகையிலும் முனைந்து மத்திய அரசின் ஏவல்களுக்கு அடிபணிந்த நிலையில் தமிழகத்தினுடைய அரசியல் நிலைமை மிகவும் தாழ்ந்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் சரியான பதில் தரக்கூடிய வகையில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு இடைத் தேர்தலில் வெற்றியை தந்து புதிய வரலாறு படைப்பார்கள்.
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் பிரைமரி நிர்வாகிகள், முஸ்லிம் லீக் தொண்டர்கள் இம்மூன்று தொகுதி களிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட உள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகம் அதன் வரலாற்றின் சிறப்போடு தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமையுமாறு, வாக்காளர் பெருமக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோகமான ஆதரவு அளித்து வெற்றிபெற செய்யுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.