புதுடெல்லி: நீதிபதி அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்த தனது முடிவை மாற்றி, அவரை திரிபுரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்துள்ளது உச்சநீதிமன்ற கொலீஜியம்.
நீதிபதி அகில் குரேஷியை மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத்தான் முதலில் இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது கொலீஜியம்.
ஆனால், நீதிமன்றத்தின் அந்தப் பரிந்துரையை மத்திய அரசு தொடர்ந்து இருமுறை நிராகரித்த காரணத்தால், தற்போது தனது முடிவை தானே மாற்றிக்கொண்டுள்ளது கொலீஜியம்.
அகில் குரேஷி விஷயத்தில் உச்சநீதிமன்ற முடிவை மத்திய அரசு ஏற்காததை அடுத்து, குஜராத் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை செப்டம்பர் 16ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் தனது முடிவை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
தற்போது தனது முடிவை தானே மாற்றி, அவரை திரிபுரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பிற பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட மோடி அரசு, அகில் குரேஷி விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.