ஸ்ரீஹரிகோட்டா:
நிலவில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்றே கடைசி நாள் என்பதால் இரவு பகல் பாராது லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த பகீரதபிரயத்தனம் செய்து வருகின்றனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.
விக்ரம் லேண்டருக்கான ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இரவு பகல் பார்க்காமல் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
நாளை முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகளால் இருள் ஏற்பட துவங்க உள்ளது. அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக, விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் உள்ள பிரக்யான் போன்ற சாதனங்களில் உள்ள நிலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிக்கப்படும். மேலும், விக்ரமின் இயந்திர பாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் தகடுகளும் திறன் இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று இரவுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், விக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்து விடும்.
தற்போது கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.