புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பாதுகாப்பு திட்டமிடல் கமிட்டியானது, தேசிய பாதுகாப்பு வியூகம் தொடர்பான தனது அறிக்கையை அக்டோபர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால போர் முனைகள், கடல்சார்ந்த அதிரடிப் படைகள் மற்றும் விரிவான ராணுவ சக்தியாக மாறுதல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அறிக்கையின் பெரும்பாலான அம்சங்கள் நிறைவடைந்துவிட்டதாகவும், சில சில சிறிய வேலைகள் மட்டுமே மிச்சமிருப்பதாகவும் தொடர்புடைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்திய ராணுவ கட்டமைப்பை வடிவமைக்கும் இந்த அறிக்கையின் அடிப்படையை கேபினட் கமிட்டி ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட பிறகே, இதுதொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாதுகாப்பு திட்டமிடல் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில்தான் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.