புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை திடீரென உச்சநீதிமன்றம் ரத்துசெய்த இடத்திலிருந்துதான் இந்தியாவின் பொருளாதார சரிவு தொடங்கியது என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய ஹரிஷ் சால்வே, இவ்வாறு கூறியுள்ளதுடன், தான் இந்தவகையில் உச்சநீதிமன்றத்தை வெளிப்படையாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். ஹரிஷ் சால்வே, 2ஜி வழக்கில் 11 டெலிகாம் நிறுவனங்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறியதாவது, “2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தவறாக பகிர்மானம் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த உரிமங்கள் தொடர்பாக பல வெளிநாட்டினர் முதலீடு செய்திருந்தனர். இந்த விஷயத்தில் முதலீடு செய்ய, வெளிநாட்டினர், இந்திய பங்குதாரர்களை வைத்திருக்க வேண்டுமென்பது விதி.
ஆனால், அந்த இந்தியப் பங்குதாரர்கள் எந்த முறையில் உரிமங்களைப் பெற்றார்கள் என்பது அந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியாது. வெளிநாட்டினர் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில், ஒரே தீர்ப்பில் 122 உரிமங்களையும் ரத்துசெய்த உச்சநீதிமன்றத்தின் செயலை எப்படி ஏற்க முடியும்?
2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடைபெற்ற தருணத்திலிருந்துதான் இந்திய பொருளாதார சரிவு துவங்கியது” என்று குற்றம் சாட்டியுள்ளார் அவர்.
கடந்த 2017ம் ஆண்டு 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த சிபிஐ விசாரணை நீதிமன்றம், ஒரு அனுமானத்தின் அடிப்படையில், சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, பெரிதும் மிகைப்படுத்தி மோசடி என்பதாக சொல்லப்பட்ட விஷயமாக இருக்கிறது இந்த 2ஜி முறைகேடு என்று நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியிருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
அந்தப் புகாரை தெரிவித்த அப்போதைய மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வினோத் ராய்க்கு, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா விடுத்த சவாலுக்கு, வினோத் ராயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.