புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுகுவது கடினமான ஒரு செயலாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டலிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக, தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேரடியாக பேசவுள்ளதாக கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தேவைப்பட்டால் காஷ்மீருக்கே நேரடியாக செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஞ்சன் கோகோய் மேலும் கூறியதாவது, “நான் இந்த விஷயத்தைப் பற்றி அதிகம் கேட்க விரும்பவில்லை. மக்களால் உயர்நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என்ற வரும் தகவல் உண்மையிலேயே மிகவும் சீரியஸான ஒரு பிரச்சினை.
நான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் நேரடியாக பேசுவேன். அங்கே நீதி மறுக்கப்படுகிறதா? என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டியுள்ளது. தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீருக்கு நான் நேரடியாகவே செல்வேன்.
ஆனால், விசாரணைக்குப் பின்னர் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரியவந்தால், அதன் விளைவுகளை சந்திக்க மனுதாரர் தயாராக இருக்க வேண்டும்” என்றார் தலைமை நீதிபதி.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகளால் குழந்தைகள் பலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, இரண்டு குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோதுதான் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.