பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார். எனவே, வரும் 2020ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இதன் கேப்டனாக அவரே நீடிப்பார் என்று கூறியுள்ளார் அம்மாநில துணை முதல்வரும், பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி.
பீகார் மாநில சட்டமேலவையின் பாரதீய ஜனதா உறுப்பினர் சஞ்சய் பஸ்வான் சில நாட்களுக்கு முன்னர் வேறொரு கருத்தைக் கூறியிருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல வேண்டும்.
அதன்மூலம், குறைந்தபட்சம் ஒரு 5 ஆண்டுக்காவது பாரதீய ஜனதாவுக்கு மாநிலத்தை ஆளும் வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவரை ஆதரித்து வருகிறோம்.
அரசியல் சட்டப்பிரிவு 370, ராமர் கோயில், முத்தலாக் மற்றும் என்ஆர்சி ஆகிய அனைத்து விஷயங்களிலும் மக்கள் மோடியை ஆதரிக்கிறார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்து எங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்தக் கருத்தை மறுத்துள்ள சுஷில்குமார் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார்தான. கடந்த 4 & 6 தடவைகள் தேர்தல் எதிரிகளை தோற்கடித்துள்ள அந்த கேப்டனை மாற்ற வேண்டிய தேவை என்ன? எனவே, வரும் 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கும் அவர்தான் எங்களின் கேப்டன் என்று கூறியுள்ளார் சுஷில்குமார்.