அமிர்தசரஸ்
சுதந்திரத்துக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலா பாக் கொடூரக் கொலைகளுக்காக காண்டர்பெரி தேவாலயப் பேராயர் ஜஸ்டின் போர்டல் வெல்பி மன்னிப்பு கோரி உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகப் பழமையான தேவாலயமான காண்ட்ர்பெரி தேவாலயத்தின் பேராயராக ஜஸ்டின் போர்டல் வெல்பி பதவியில் உள்ளார். இந்த தேவாலயத்தில் அரச குடும்பத்தினர் ஞானஸ்நானம் பெறுவது கடந்த 597 ஆம் வருடத்தில் இருந்து நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் குரு என இந்த தேவாலயத்தின் பேராயர் கருதப்படுகிறார். இவர் தற்போது தனது மனைவி கரோலின் உடன் 10 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் பெரும் திரளான மக்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குழுமி இருந்தனர் அந்த மைதானத்துக்குக் குறுகலான ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருந்தது.
பிரிட்டன் அரசு அதிகாரியான ரெஜினால்ட் டயர் தனது படைகளுடன் அப்போது வந்து சரமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தினான். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 380 பேர் உயிரிழந்தனர் என அரசு தரப்பில் சொல்லப்பட்ட போதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. இது இந்திய வரலாற்றில் இது மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
தற்போது இந்தியப் பயணம் மேற்கொள்ளும் பேராயர் ஜஸ்டின் போர்டல் வெல்பி ஜாலியன்வாலா பாக் மைதானத்துக்குச் சென்று அங்கு இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன் இதற்காக மன்னிப்பு கோரி உள்ளார்.
இந்த மைதானத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அவர், “இங்கு வந்த போது ஒரு பிரிட்டன் கிறித்துவனாக நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கொடூர சம்பவங்களால் மிகவும் அவமானம் அடைந்துள்ளேன். எண்ணற்ற அப்பாவிகளைக் கொலை செய்த இந்த நிகழ்வு அக்கால இளைய தலைமுறையினர் சுதந்திரத்துக்காகச் செய்த தியாகம் எனக்கு மிகவும் துயரைத்தை அளித்துள்ளது” என பதிந்துள்ளார்.
அவர் தனது டிவிட்டரில், “நான் ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற போது மிகவும் துயரமும் மனிதாபிமானத்துக்கு எதிரான இந்த கொலையால் அவமானமும் அடைந்தேன். கடந்த 1919 ஆம் வருடம் பிரிட்டன் ராணுவத்தினரால் இங்கு ஏராளமான சீக்கியர்கள் மட்டுமின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்” என பதிந்துள்ளார்
ஜஸ்டின் தனது முகநூலில், “ஜாலியன் வாலா பாக் படுகொலைக்காக வருந்தவோ அல்லது மன்னிப்பு கோரவோ தேவையான பதவியில் நான் இல்லை. ஆயினும் ஒரு மனிதன் என்னும் முறையில் நான் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு இதற்காக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு குடிமகன் என்னும் முறையில் மன்னிப்பு கோருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.