சென்னை: ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் புதிய நிதியமைச்சரின் பட்ஜெட் போன்றவற்றால் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் தொழில்துறையின் அவல நிலைக்கான காரணமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது சர்ச்சைகளை மட்டுமல்ல; கேலி – கிண்டல்களையும் கிளப்பியுள்ளது.
மோடி ஆட்சியின் 100 நாட்கள் சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்த நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி குறித்தும் விளக்கம் அளித்தார்.
“ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள். அதில் பிஎஸ்6 ரக வாகனங்களுக்கான அதிகளவு பதிவு கட்டணமும் ஒன்று. தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு புதிய வாகனங்களை வாங்கும் ஆசை குறைந்துள்ளது.
அதிலும் இளைஞர்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் விருப்பம் இருப்பதில்லை. அவர்கள் ஓலா மற்றும் உபேர் சேவைகளைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். மேலும், அதிகம் பேர் மெட்ரோ ரயில் சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் புதிய வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. நாடு முழுவதும் நாங்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்” என்று பதிலளித்தார்.
இதுதான் கண்டனங்களையும், கேலி – கிண்டல்களையும் கிளப்பி விட்டுள்ளது.
‘இளைஞர்கள் சொந்தமாக வீடு வாங்காமல் ஓயோ ரூம் சேவையைப் பயன்படுத்துவதால்தான் ரியல் எஸ்டேட் துறை வீழ்ந்துள்ளது என்றும், அவர்கள் லாரி வாங்காத காரணத்தால்தான் லாரி விற்பனையும் சரிந்துவிட்டது’ என்றும் கிண்டல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.