புதுடெல்லி: தங்களுடைய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பிறருக்கு வழிகாட்டும் பண்பு ஆகியவற்றால், பிறப்பால் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள் பிராமணர்கள் என்று பேசியுள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியுள்ளதாவது, “பிராமண சமூகமானது எப்போதுமே பிற சமூகங்களுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சமூகத்தில் கல்வி மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைப் பரப்பும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நாட்டில் இன்றைய நிலையிலும்கூட, ஆசிரியர்களாகப் பணியாற்றும் பலரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த நாட்டில்வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பை அவர்கள் மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.
அவரின் இந்தக் கருத்துக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மக்களவை சபாநாயகர் என்ற உயர்ந்த அரசியல் சாசன பொறுப்பை வகிக்கும் ஓம் பிர்லா போன்றவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சமூகத்தைப் பிற சமூகத்தோடு ஒப்பிட்டு உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ பேசுவது, அரசியல் சட்டம் 14வது பிரிவின்படி குற்றமாகும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு வருணாசிரம சாதிய ஆதிக்க உணர்வுடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.