பெலகாம், கர்நாடகா

பெலகாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 21 வயது இளைஞர் தன்னை பப்ஜி விளையாடத் தடுத்ததற்காகத் தனது தந்தையைத் தலையை வெட்டிக் கொன்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாம் மாவட்டத்தில் உள்ள கட்கி என்னும் ஊரில் சங்கரப்பா கம்மவார் காவல்துறையில் பணி புரிந்து வந்தார்.   இவருடைய மகனான 21 வயது  இளைஞர் ரகுவீர் கம்மவார் கல்லூரியில் படித்து வந்தார்.   இவருக்கு மொபைல் விளையாட்டான பப்ஜி மீது கடும் மோகம் கொண்டு அதற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்.   இந்த மோகத்தினால் அவர் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

அதையொட்டி தந்தைக்கும் மகனுக்கும் இடையில் அடிக்கடி சச்சரவு ஏற்படுவது வழக்கமாகி உள்ளது.   கல்லூரிக்குச் செல்லவில்லை என்றால்  எங்காவது வேலைக்குச் செல்லுமாறு ரகுவீரிடம் தந்தை கூறி உள்ளதையும் அவர் காதில் வாங்காமல் நாள் முழுவதும் பப்ஜி விளையாடி வந்துள்ளார்.  இது குறித்து தன்னுடன் பணி புரிபவர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி சங்கரப்பா மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு ரகுவீரின் மொபைல் கட்டணம் முடிந்துள்ளது.   எனவே அதைப் புதுப்பித்து பப்ஜி விளையாடத் தந்தையிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.   தந்தை பணம் கொடுக்க மறுத்ததையொட்டி மீண்டும் சண்டை நடந்துள்ளது.    தந்தையின் மீது கோபம் கொண்ட ரகுவீர் தனது விட்டிலுள்ளோர் தூங்கிய பிறகு தந்தையின் குரல்வளையைக் கத்தியால் அறுத்துள்ளார்.

 

அதன்பிறகு சங்கரப்பாவின் உடலில் இருந்து தலை மற்றும் காலை துண்டித்து விட்டு அங்கிருந்து மொபைலுடன் ஓடி விட்டார்.   மறுநாள் தலை வெட்டப்பட்டு இறந்து  கிடந்த சங்கரப்பாவைக் கண்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.   ரகுவீரை தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினரிடம் தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.   அவர் மீது கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.