லக்னோ
உச்சநீதிமன்றம் எங்களுடையதாக உள்ளதால் ராமர் கோவிலை நிச்சயம் அமைப்போம் என உத்திரப்பிரதேச அமைச்சர் முகுத் பிகாரி வர்மா தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் அமைப்பதாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து வருகிறது. இதற்கு இந்து மத அமைப்புக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த அமைப்புக்கள் நாடாளுமன்றத்தில் இதற்காகச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதை ஆதரித்துக் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசி உள்ளார். அதற்கு எதிர்க்கட்சியினர் இடையே கடும் எதிர்ப்பு உண்டானது. சிறிது நாட்களில் இந்த சர்ச்சை சற்று அடங்கியது. தற்போது மற்றொரு உத்திரப் பிரதேச அமைச்சரின் பேச்சு ராமர் கோவில் சர்ச்சையை மீண்டும் கிளப்பி உள்ளது.
உத்திரப் பிரதேச மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் முகுத் பிகாரி வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராமர் கோவில் கட்டுவது நமது முடிவைப் பொறுத்ததாகும். உச்சநீதிமன்றம் நம்முடையது. நம்மிடம் சட்டம், நாடு மற்றும் கோவில் ஆகிய அனைத்தும் உள்ளது.. ஏற்கனவே ராமர் கோவில் அமைப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த பாஜக அவசியம் ஆட்சியைப் பிடிக்கும்.”எனத் தெரிவித்தார்.
இது செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதை அறிந்த அமைச்சர் சட்டென, “நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள் என்பதால் உச்சநீதிமன்றம் நம்முடையது எனச் சொன்னேன். மற்றபடி உச்சநீதிமன்றம் நமது அரசுடையது எனக் கூறவில்லை” எனச் சொல்லிச் சமாளித்துள்ளார்.