மல்காங்கிரி, ஒரிசா
ஒரிசா மாநிலத்தில் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண் முதல் பயணிகள் விமான ஓட்டியாகப் பதவி ஏற்றுள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள 4.2 கோடி மக்கள் தொகையில் 22.95% மக்கள் பழங்குடியினர் ஆவார்கள். அம்மாநிலத்தில் உள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் அதிக அளவு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் 57.4% பேர் பழங்குடியினர் ஆவார்கள். ஒரிசாவில் படிப்பறிவு விகிதம் 95% ஆக இருந்த போதிலும் பெண்களில் 41.2% பழங்குடி மக்கள் மட்டுமே படித்தவர்கள் ஆவார்கள்.
மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டேபிள் மரினியாஸ் லாக்ரா. மற்றும் அவர் மனைவி ஜிமாஜ் யாஷ்மின் லாக்ரா ஆகியோரின் மகள் அனுப்ரியா மதுமிதா லாக்ரா ஆவார். அனுப்ரியா சிறுவயதில் இருந்தே விமானம் ஓட்டுவதில் ஆர்வத்துடன் இருந்தார். மல்காங்கிரி நகரில் 10 ஆம் வகுப்பு முடித்த அவர் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை கோரப்புட் நகரில் முடித்தார்.
அதன் பிறகு அனுப்ரியா, புவனேஸ்வர் நகரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு விமானம் ஓட்டுவதில் உள்ள ஆர்வம் காரணமாகக் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு புவனேஸ்வர் அரசு விமான ஓட்டி பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் கல்லூரி கட்டணம் செலுத்த அவர் தந்தைக்குப் பணம் இல்லாததால் தந்தையின் சகோதரர்கள் கடன் வாங்கி உதவி செய்தனர்.
தற்போது பயணிகள் விமான ஒட்டி உரிமம் பெற்றுள்ள அனுப்ரியா இண்டிகோ விமான நிறுவனத்தில் விமான ஓட்டியாக பணியில் அமர்ந்துள்ளார். ஒரிசா மாநில பழங்குடி பெண்களில் விமான ஓட்டியான முதல் பெண் என்னும் பெருமையை அனுப்ரியா பெற்றுள்ளார். இவருக்கு ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநில ஆதிவாசிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் நிரஞ்சன் பிசி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போது 27 வயதாகும் அனுப்ரியாவின் தந்தை இது குறித்து தனது மகள் பழங்குடியினருக்கு மட்டுமின்றி ஒரிசா மாநிலத்துக்கே பெருமை தேடித் தந்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.