புதுடெல்லி: நாட்டின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று(ஞாயிறு) காலையில் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த ஜெத்மலானி, கடந்த ஒரு வாரமாக மிகவும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று காலையில் அவரின் உயிர் பிரிந்தது.
அவரின் இறுதிச் சடங்குகள் டெல்லியின் லோடி சாலையிலுள்ள மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர்களில் இவர் முக்கியமானவர். ராஜீவ் காந்தி காலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் தமிழர்கள், அப்சல் குரு, ஜெசிகா லால் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜரானவர்.
வாஜ்பாய் அமைச்சரவையில், பல துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தவர். ஆனாலும், முழு பதவிகாலமும் அமைச்சராக நீடிக்க முடியாதவர். இந்திரா காந்தி கொலை வழக்கு, ஹர்ஷத் மேத்தா வழக்கு, கேதன் பேரக் வழக்கு போன்ற மிகப் பிரபலமான வழக்குகளிலும் ஆஜரானவர்.
மூத்த பாரதீய ஜனதா தலைவர் அத்வானிக்கு ஆதரவாக ஹவாலா வழக்கில் ஆஜரானவர். இதுதவிர, லாலுபிரசாத், ஜெயலலிதா மற்றும் கனிமொழி போன்ற அரசியல் பிரபலங்களின் வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு லக்னோ தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த இவருக்கு, கடந்த 2010ம் ஆண்டு அக்கட்சி சார்பில் ராஜ்யசபா டிக்கெட் தரப்பட்டது.
இவரின் மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் நரேந்திர மோடியின் விமர்சகர்களுள் முக்கியமானவர்.