டில்லி
விவசாயத்துக்குத் தேவையான டிராக்டர் போன்றவற்றை வாடகைக்கு அளிக்க மொபைல் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது.
விவசாயிகளுக்கு முக்கிய தேவையான டிராக்டர் போன்றவை விலை உயர்ந்த பொருட்கள் ஆகும். இதனால் இந்த பொருட்களை ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் வாங்க இயலாத நிலையில் உள்ளனர். டிராக்டர்கள் மூலம் உழுவது, நிலத்தைச் சமன் செய்வது, விதை விதைப்பது உள்ளிட்ட பல விவசாயப்பணிகளைச் செய்ய முடியும் என்பதால் நவீன விவசாயத்தில் டிராக்டர் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது.
எனவே அரசு வசதி குறைவான விவசாயிகளுக்காக “விவசாயிகளுக்கான உபேர்” என்னும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், மற்றும் தொழிலதிபர்கள் பதிந்துக் கொள்ள முடியும். இந்த செயலியின் கீழ் 38000 வாடகை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் சுமார் 1 லட்சம் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விட தயார் நிலையில் உள்ளன.
தற்போது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சில பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக இந்த செயலி இயங்கி வருகிறது. அரசு இந்த செயலியை நாடெங்கும் விரைவில் அறிமுகம், செய்ய உள்ளது. இந்த செயலி அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியதும் விவசாயிகள் தங்கள் பெயர்,முகவர் மற்றும் மொபைல் எண்கள் மூலம் விவசாய உபகரணங்களை வாடகைக்கு எடுக்க முடியும்
இந்த செயலியில் பதிவு செய்த ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை உழத் தேவையான டிராக்டர் வேண்டும் என்றால் அவருக்கு இந்த செயலி இத்தகைய டிராக்டர் இருக்கும் மையங்களைத் தெரிவிக்கும். இந்த மையங்கள் 5 முதல் 50 கிமீ தூரத்தில் இருக்கும். மற்றும் இதற்கான வாடகையும் செயலி மூலம் தெரிவிக்கப்படும். விவசாயிகள் இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான நேரத்தில் இந்த உபகரணங்களை வாடகைக்குப் பெற முடியும்.