லக நாடுகள் அனைத்தும் விண்வெளித்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில்  வியத்தகு சாதனைகளை நிகழ்ச்சி உலகத்தையே வியக்க வைத்து வருகிறது.

முதன்முதலாக நிலவை ஆராய்ச்சி செய்ய முயற்சி செய்த  ரஷ்ய விஞ்ஞானிகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது.  இந்த ஆராய்ச்சி 10முறை தோல்வி அடைந்த பிறகே, 11முறை யாகவே விண்கலத்தை  நிலவில் தரையிறக்க முடிந்தது. அதன்பிறகே அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவே நிலவுக்கு தனது பயணத்தை தொடங்கியது. அதைத்தொடர்ந்து தான், நாசாவில் அப்பல்லோ விண்கலம் மூலம் மனிதன் அனுப்பப்பட்டு, நிலவில் காலெடுத்து வைத்தான்.

நிலவில் மனிதன் கால் வைத்து  50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரயான்-2ன் வெற்றிப்பயணம் 99 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது.  இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, தனது முதல் முயற்சியிலேயே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது. இது உலக விஞ்ஞானிகளின் முக்கில் விரலை வைக்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும், Soft landing எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு நாடுகள் இதுவரை 38 முறை, விண்கலங்களை நிலவில் தரையிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளன. இவற்றில் 20 முறை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இஸ்ரோ வின் தற்போதைய சாதனை பயணம் 99 சதவிகிதம் வெற்றி அடைந்து, இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைச்சாற்றி உள்ளது.

முதன்முதலாக நிலவுக்கு லேண்டரை அனுப்பி தரை இறக்கிய நாடு சோவியத் ரஷ்யா. அந்த வெற்றி அவர்களுக்கு சும்மா கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக பணியாற்றி 10முறை நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், 11வது முறை அனுப்பப்பட்ட விண்கலமே நிலவில் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்தே அமெரிக்காவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. நாசா இதுவரை  6 முறைகள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது.  இதைத்தொடர்ந்தே மேற்கத்திய நாடுகளும், ஆசிய நாடுகளும் இன்னும் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தொடர்ந்து வருகின்றன.

நாசா மீண்டும்  2024ஆம் ஆண்டு நிலவுக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரோவின் சந்திரயான் திட்டம் குறித்து ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக  நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 10 மாத காலம் ஆராய்ச்சி செய்தது.  அதன்மூலமே  நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது வரலாற்று சாதனையாக கருதப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த  மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்து சாதனைப் படைத்தார்.

இதைத்தொடர்ந்தே சந்திரயான்-2 திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்படி படி, இதுவரை எந்தவொரு நாடும் நிலவில் கால்பதிக்க முயற்சி செய்யாத, நிலவின் வடக்கு துருவ பகுதியில் தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டது.

அதன்படியே சந்திரயான்-2 விண்ணுக்கு செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர், பிரக்யான் என்ற 3 பகுதிகளை உள்ளடக்கியது.  இதன்படி நிலவில் 3 விதமான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி, ஆர்பிட்டர், சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் ஓராண்டு காலம் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ச்சி செய்யும். இந்த பணி வெற்றிகரமாக நடைபெற்றது.  ஆர்பிட்டர் சந்திரனின் மேலாக நிலை கொண்டு வெற்றிகரமாக சந்திரனை சுற்றி வருகிறது.

விக்ரம் எனப்படும் லேண்டர் இந்த சாதனம் நிலவில் கால் பதிப்பதில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. பூமியிலிருந்து 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்து, நிலவை நெருங்கிய நிலையில், கிட்டத்தட்ட ஒருசில நிமிடங்களில் நிலவில் தரையிறங்கப் போவதை உலகமே வியந்து கண்கொட்டாமல் பார்ர்துக்கொண்டிருந்த நிலையில், சுமார்  2.1 கி.மீ தூரத்தில் பூமியுடனான தகவல் தொடர்பை இழந்து, இந்திய விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

உலகின் எந்த நாடும் இதுவரை தரையிறங்க முயற்சி செய்யாத, நிலவின் தென்பகுதியில் கால் பதிக்க முயன்ற இஸ்ரோவின் சாதனையில் இது ஒரு சதவிகிதம் மட்டுமே பின்னடைவு. மற்ற அனைத்துப் பணிகளும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை எந்தவொரு நாடும் தங்களது, முதல் முயற்சியிலேயே நிலவில் தங்கள் செயற்கைக்கோளை நிலை நிறுத்தாத நிலையில், இந்தியா, முதன்முதலாக நிலவில் செயற்கை கோளை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.

சந்திரயான்-2 திட்டப்பணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிவன்பிள்ளை தலைவராக இருந்து செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தற்போதுதான்  முதல்முறைதான் லேண்டரை அனுப்பியிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது பத்து ஆண்டு கால உழைப்பில், சற்றே சறுக்கல் ஏற்பட்டிருந்தாலும், அடுத்த முயற்சி 100 சதவிகிதம் வெற்றி பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பின்னால் இந்த நானே அணிவகுத்து நிற்கிறது… அவர்களின் அயராத உழைப்புக்கு பத்திரிகை.காம் இணையதளமும் மக்களோடு மக்களாக தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.