ஸ்ரீஹரிகோட்டா:

நிலவை ஆராய இந்திய விண்வெளி நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில், விக்ரம் லேண்டரில் கிடைத்து வந்த  சிக்னல் டவுன் ஆனதை தொடர்ந்து விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்து உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,  கடந்த ஜூலை 22ம் தேதி (2019) சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம்  விண்ணில் ஏவியது.

விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில்,  கடந்த  ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலக்கி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 20ந்தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அதன் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும்  வந்தது. இறுதியாக செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரை யிறங்கும் என இஸ்ரோ  தெரிவித்திருந்தது.

சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு. ஒன்று நிலவை சுற்றி வரும் கலன். இரண்டு நிலவில் தரையிறங்கும் விக்ரம் கலன். மூன்றாவது நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் பிரக்யான்.

விக்ரம் நிலவில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது. ஏனென்றால் இஸ்ரோவில் இருந்து எந்தவித தொடர்பும் இல்லாமல் தானாகவே வழிநடத்திக் கொண்டு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும். அதன் பின்னர் விக்ரம் கலனில் இருந்து பிரக்யான் உலாவி வெளியில் வந்து நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். எனவே தான் அந்த 15 நிமிடம் மிகவும் முக்கியமானது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை 2.00  மணியை தாண்டிய நிலையில், திடீரென சிக்னல் டவுன் ஆன நிலையில், விஞ்ஞானிகள் இடையே பரபரப்பு நிலவியது. பிரதமர் மோடியும் சோகத்துடன் கட்டுப்பாட்டு அறையை விட்டு புறப்பட்டார்.

இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்-ஐ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி  வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி செய்து வந்தனர். ஆனால், துரதிருஷ்ட வசமாக விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில், சந்திரயான்2  நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சந்தியான்-2ல் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதிக்கும் தருணத்தை காண பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டுஅறைக்க  வருகை தந்துள்ளார். அவரது  வருகையை முன்னிட்டு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருடன் 70 பள்ளிக்குழந்தைகளும் சந்திராயன்2 நிலவில் கால் பதிப்பதை காண ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், கடைசி நில நிமிடத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் வராத நிலையில், சந்திரயான்-2 நிலை என்ன என்பது தெரியவில்லை.