download
தமிழக சட்டசபை கூடி..  கவர்னர் ரோசய்யா உரையாற்றி வருகிறார்.  “தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை ஈர்க்கும் பல அறிவிப்புகள் வரும்” என்பது பலரது அபிப்பிராயம். குறிப்பாக, மதுக்கடை நேரம் குறைக்கும் அறிவிப்பு வரலாம் என்று ஒரு யூகம்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவர், “மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஜெயலலிதாவுக்கு கிடையாது. பிறகு எப்படி நல்ல திட்டங்களை கொண்டுவருவார்?  குறிப்பாக, மதுக்கடை நேரம் குறைக்கப்படும் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை.  மது வருமானத்தை பெரிதாகவும், பெருமையாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் அரசு இது” என்றார். மேலும், “உருப்படியான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.  எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் நிலையில்தான் கவர்னர் உரை இருக்கிறது” என்றார்.
சமீபத்தில் துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் சோவின் பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “பல  கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து, “இன்றைய அரசியல்” என்ற தலைப்பில் பேச சொன்னதால், நிகழ்ச்சி நடுநிலையோடு இருக்கும் என்று நினைத்து சென்றேன்.  அனைத்துக் கட்சித் தலைவர்களும் எத்தகைய அரசியல் காழ்ப்பு உணர்ச்சியும் இல்லாமல் மேடை நாகரிகத்தோடு பேசினர். சில தலைவர்கள் பேசியதில்  பிறருக்கு  கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பொருட்டாக  யாரும் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் நிகழ்ச்சியை நடத்தும் சோ, முழுக்க முழுக்க மத்திய பாஜக அரசை போற்றிப் புகழ்ந்தார்.  காங்கிரஸை தூற்றினார். அதே போல அதிமுகவை புகழ்ந்து திமுகவை விமர்சித்தார். இப்படி மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் சோ ஜால்ரா தட்டியதால் வெளிநடப்பு செய்தேன்!” என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அவரிடம், :ஜெயலலிதாவின் பினாமி நிறுவனம் என்று சொல்லப்படும் மிடாஸ் சாராய ஆலைக்கு இடையில் எம்.டி.யாக இருந்தார் துக்ளக் ஆசிரியர் சோ. அதனால் அவர் ஜெயலலிதாவை ஆதரித்து பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா” என்று கேட்டோம்.
அதற்கு இளங்கோவன், “அந்த விவகாரம் பற்றி முழு தகவல் எனக்கு தெரியாது.  தவிர, சோவின் தனிப்பட்ட நாணயத்தை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அவருடைய கருத்துக்கள் தமிழகத்துக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி!  மத சார்பு சக்திகளை அவர் முன்னிறுத்துவது  ஏற்றுக்கொள்வே முடியாதது!” என்றார்.