ஸ்ரீஹரிகோட்டா:

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் இன்று நள்ளிரவு  நிலவில் கால் பாதிக்க உள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் மோடியுடன் 70 பள்ளிக்குழந்தைகளும் நேரலையில் பார்வையிடுகின்றனர்.

இந்த நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் எப்படி தரையிறக்கப்படும் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை 22ம் தேதி (2019) சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில்,  கடந்த  ஆகஸ்டு மாதம்  14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம் ஆகஸ்டு 20ந்தேதி முதல்,  நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதியன்று, விண்கலத்தில் இருந்து லேண்டர்  தனியாக பிரிக்கப்பட்டு, நிலவை சுற்றி வருகிறது. அதன் சுற்றுவட்டப்பாதை அவ்வப்போது சுருக்கப்பட்டு, நிலவின் அருகில் தற்போது சுற்றி வருகிறது. அதை நிலவில் தரை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நள்ளிரவு 1மணி முதல் 2 மணிக்குள்  ‘லேண்டர்’ நிலவில் தனது காலை பதிக்க உள்ளது. இந்த நிகழ்வை பெங்களூரில்  பின்யா என்ற இடத்தில் உள்ள இஸ்ரோவின் டெலி மெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கமென்ட் கட்டமைப்பு மையத்தில்  பிரதமர் மோடி  70 பள்ளிக்குழந்தைகளுடன் நேரலையில் காண இருக்கிறார்…

இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ…