டெல்லி:
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் இல்டிஜா முப்தி, தனது தாயை காஷ்மீர் சென்று நேரில் சந்திக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரித்து உள்ளது. முன்னதாக அங்கு ராணுவம் குவிக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன.
தொலைதொடர்பு சேவை முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில், முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 140 அரசியல்வாதிகள்,சமக செயற்பாட்டாளர்கள் வீட்டு காவலில் வைக்கப் பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தன்னுடைய தாய் மெகபூபா முப்தியை சந்திக்க வேண்டும் என்று அவரது மகள் சானா இல்டிஜா முப்தி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவில், என் தாய் கடந்தா மாதம் (ஆகஸ்டு) 5ம் தேதியில் இருந்து வீட்டு சிறையில் இருக்கிறார். அவரை வீட்டு சிறையில் வைத்து இருப்பதற்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அவரை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ போட்பே, எஸ் ஏ நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎம் பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பபட்டதை சுட்டிக்காட்டி, அதுபோல தன்னையும் காஷ்மீர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இல்டிஜா முப்தி காஷ்மீர் சென்று தனது தாய் மெகபூபா முப்தியை சந்திக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளனர்.
இல்டிஜா முப்தி தற்போது சென்னையில் இருக்கிறார். நாளை அவர் காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.