அரசியலுக்கு வந்த பிறகு கலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதற்கு முன் இந்தியில் மட்டுமே ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. அதுவும் அந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றவுடன் எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்தது.
விமர்சனங்களுக்கு குறைவில்லாமல் சென்ற இந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் கமல் உள்ளே வந்த போது வேறு பல விமர்சனங்கள் எழுந்தன. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால்தான் கமல் டிவி பக்கம் வருகிறார் என பலர் வம்பு பேசினர்.
இதையடுத்து கமல் அரசியல் பிரவேசம் செய்துள்ளதால் வெற்றிகரமாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கமல் குறித்து பல எதிர் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் உலாவத் தொடங்கின.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அரசியலுக்கு வந்த பிறகு கலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.