டில்லி:
கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி நடத்திய கடும் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, காஷ்மீரில் உடல்நலம் குன்றி அவஸ்தைப் பட்டு வந்த யூசுப் தாரிகாமியை காஷ்மீரில் இருந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க் கட்சித்தலைவர்கள் யாரும் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட வில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இரு முறை செல்ல முயன்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தமது நண்பரும், கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், மூத்த தலைவருமான முகமது தாரிகமியை நேரில் சந்திக்க அனுமதிக்க கோரி, சீத்தாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், யெச்சூரி காஷ்மீர் செல்ல நிபந்தனைகளுடன் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியது. மேலும், காஷ்மீர் சென்று வந்ததும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து காஷ்மீர் சென்ற யெச்சூரி, அங்கு முகமது தாரிகமியை நேரில் சந்தித்து விட்டு டில்லி திரும்பினார். அது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் அபிடவிட்டும் தாக்கல் செய்திருந்தார்.
அதில், உடல்நலம் குன்றியுள்ள முகமது தாரிகமிக்கு சிறந்த சிகிச்சசை அளிக்க வேண்டும் என்றும், அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கடுமையான வாதங்களைத் தொடர்ந்து, முகமது தாரிகமியை காஷ்மீரில் இருந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
யெச்சூரியின் கடுமையான சட்டப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.