சென்னை
தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க இலவச ஆலோசனை அளிக்கச் சென்னை ஐஐடியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழில்களிலும் முக்கிய செலவு மின்சாரக் கட்டணம் ஆகும். தற்போதைய நிலையில் பொருளாதார சரிவினால் பல தொழில்கள் முடங்கி வருகின்றன. எனவே இந்த தொழில்களைப் புனரமைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய நடவடிக்கை தொழிற்சாலைகளில் செலவைக் குறைப்பதாகும். இதில் முக்கிய செலவான மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார பயன்பாட்டைக் குறைப்பது அவசியமாகும்.
இதையொட்டி ஐஐடி சென்னை ஒரு புதிய பிரிவை அமைத்துள்ளது. தொழிற்சாலை மின் பயன்பாட்டு மதிப்பீட்டுப் பிரிவு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரிவில் பேராசிரியர்கள் மகேஷ் வி பஞ்சகுலா, சத்யநார்யாண சேஷாத்ரி, ரகுநாதன் ரங்கசாமி, சங்கர் நரசிம்மன், ஸ்ரீகாந்த் வேதாந்தம், கிருஷ்ணா வாசுதேவன், வி ஆர் முரளிதரன், உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களின் மாணவர்களும் உதவியாளர்களாக உள்ளனர்.
இந்தக் குழு ஏற்கனவே 24 ஆய்வு நடத்தி உள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை நடத்திய மதிப்பீட்டில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் மின்சார பயன்பாட்டுக்கான தீர்வை கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தீர்வை திட்டமாக்குவதன் மூலம் தொழிற்சாலைகளில் மின் கட்டணத்தை ரூ.50 லட்சம் முதல் ரூ1 கோடி வரை மிச்சம் செய்ய வாய்ப்புள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது. ஒரு சில துணி மற்றும் பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் இந்த திட்டங்களின் மூலம் ரு.20 லட்சம் வரை மின் கட்டணத்தை ச்சம் செய்துள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த குழு தனது சேவையை இலவசமாகச் செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு சில தனியார் நிறுவனங்கள் பண உதவி செய்துள்ளன. அவர்கள் ஏற்கனவே இந்த திட்டத்தைச் செயல்படுத்தி மின்சார பயன்பாட்டை பெரிதளவில் குறைத்துள்ளதாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய இந்தியத் தொழிற்கூடங்களுக்கு இது அவசியத் தேவை எனவும் இதைப் பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும் எனவும் குழுவினர் கூறி உள்ளனர்.