டில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சி செய்வதை எதிர்த்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தமுன்ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சிதம்பரத்தை செப்டம்பர் 5ந்தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை விதித்துள்ளது.
முந்தையகாங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தால், அதை பயன்படுத்தி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறிவெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு டில்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர் தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அவரை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, தன்னை கைது செய்ய தடை விதிக்ககோரி, உச்சநீதி மன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பின் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்த சிதம்பரத்தை செப்டம்பர் 5ந்தி வரை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை விதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.