சென்னை:
தி.நகர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வரும் பகுதியான சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலை ஆக்கிரமிக்கப்படுவதாகவும், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தி.நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2017ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த நீதி மன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து அறிக்கை கேட்டது. அதையடுத்து, கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஆட்சேபனை இல்லை எனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் 33 அடி அகல சாலையையும் சங்க கட்டிடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்த சாலையை மீட்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு இன்று தீர்ப்பு கூறியது.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, புதிதாக கட்டடம் கட்ட 2017ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.