மும்பை: மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ. தலைவர் அமித்ஷா மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, மராட்டிய சட்டசபைத் தேர்தலில், இரண்டு கட்சிகளும் சரிசமமான இடங்களில் போட்டியிட்டு, எஞ்சியிருக்கும் இடங்களை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று முடிவானது.
ஆனால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலைப் போலவே இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடப் போகின்றன மற்றும் முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையிலும் மோதல் நிலவுகிறது என்று சமீபத்தில் தகவல்கள் பரவின.
ஆனால், தற்போது பேசியுள்ள உத்தவ் தாக்கரே, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் இரு கட்சிகளும் தலா 135 இடங்களில் போட்டியிட்டு, எஞ்சிய 18 இடங்களை இதர சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.