கவுகாத்தி

அசாம் குடியுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டோருக்கு இலவச சட்ட உதவி  அளிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தேசிய குடியுரிமை பதிவுச் சட்டப்படி கடந்த 1971 மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்பு  இந்தியாவில் அவர்களோ அல்லது அவர்கள் முன்னோரோ அசாமில் வசித்து வந்ததை நிரூபிக்க இயலாதவர்கள் வெளிநாட்டினர் என அறிவிக்கப்படுவார்கள். இந்த சட்டம் மாநிலத்தில் வசித்து வரும் இந்தியர் அல்லாதோரை இனம் காண உதவுவதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. அதையொட்டி மீண்டும் பதிவு செய்துக் கொள்ளவும் அந்த பதிவு  சரி பார்க்கப்பட்டுச் சரியாக இருந்தால் குடியுரிமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டது.

அதன் பிறகு வந்த வரைவுப் பட்டியலில் புதியதாகச் சிலர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பட்டியலில் இருந்தோர் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. அதையொட்டி மீண்டும் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கியது. இந்த பட்டியலின் இறுதி வடிவம் இந்த மாதம்31 அன்று வெளியிடப்பட உள்ளது.

இது  குறித்து அசாம் மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் சஞ்சய் கிருஷ்ணா, “இந்த பட்டியலில் இடம் பெறாதோர் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. வெளிநாட்டினர் தீர்ப்பாயம் என்பது வெளிநாட்டினரைக் கண்டறிய மட்டுமே ஆகும்.

எனவே இந்த பட்டியலில் பெயர் விடுபட்டால் இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பது பொருள் அல்ல. அவ்வாறு விடுபட்டோருக்குத் தேவையான சட்ட உதவிகளை அசாம் அரசு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.