தர்மஸ்தலா
புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் உடல் நிலை குறித்து வந்த செய்திகளை அடுத்து அவர் 110 வருடங்கள் உயிர் வாழப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனா – திபெத் அரசியல் குழப்பங்களை அடுத்து கடந்த 1959 ஆம் வருடம் திபெத்தில் வசித்து வந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா தன் உயிரைக் காக்க அங்கிருந்து ஒடி வந்தார். தற்போது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அவருக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல் நிலை மோசமாக உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் உலகெங்கும் உள்ள அவருடைய சீடர்கள் கடும் துயரம் அடைந்தனர். தற்போது 84 வயதாகும் தலாய் லாமா சென்ற வாரம் மானசோட்டா திபேத் சங்கம் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கு பெற்று உரையாற்றினார். அப்போது அவர் நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டுள்ளார்.
தலாய் லாமா தனது உரையில், “எனது உடல்நிலை சரியில்லை எனத் தகவல்கள் வந்ததில் இருந்து எனக்கு ஏராளமான தொலைப்பேசி அழைப்புக்கள் வருகின்றன. பலர் பேசும் போதே அழுவதை என்னால் கேட்க முடிகிறது. நீங்கள் யாரும் என்னைக் குறித்து கவலை அடைய வேண்டாம். சமீபத்தில் நான் கண்ட ஒரு கனவில் எட்டு தர்மத்தையும் காக்கும் ஒரு தேவதை வந்தார். அவர் நான் 110 வருடம் வரை உயிருடன் வாழ்வேன் என ஆசி அளித்துள்ளார்.
எனவே என்னுடைய உடல்நிலை குறித்து நீங்கள் யாரும் கவலையடைய வேண்டாம். எனது உடல்நிலை மிகவும் சரியாக உள்ளது. எனது ஜீரண உறுப்புக்கள் உலகையே ஜீரணிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளன. இந்திய அரசு எனக்கு உலகில் சிறந்த அனைத்து வித மருத்து வ உதவியையும் அளித்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு வீடியோ பதிவாகி தலாய் லாமா சீடர்கள் லட்சக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.