புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஃபெரோஷா கோட்லா அரங்கத்திற்கு சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லியின் பெயர் விரைவில் சூட்டப்படவுள்ளது.
மறைந்த அருண்ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். இவரின் காலத்தில்தான் ஃபெரோஷா கோட்லா அரங்கம் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்பட்டது.
அங்கே, வீரர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த வகையில் டிரஸ்ஸிங் ரூம் அமைக்கப்பட்டது. இவரின் காலத்தில்தான் சேவாக், நெஹ்ரா, விராத் கோலி, இஷாந்த் சர்மா மற்றும் கம்பீர் போன்ற சிறப்பான வீரர்கள் உருவாயினர்.
எனவே, ஃபெரோஷா கோட்லா அரங்கத்திற்கு அருண் ஜெட்லியினுடைய பெயரும், அங்குள்ள ஒரு கேலரிக்கு தற்போதைய கேப்டன் கோலியின் பெயரும் வைக்கப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் இதற்கான விழா நடைபெறவுள்ளது.
அதேசமயம், மைதானப் பகுதி ஃபெரோஷா கோட்லா என்ற பழைய பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.