டெஹ்ராடூன்: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் சில இமயமலை மாநிலங்களில் வாழும் 150க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்று இந்திய வனவிலங்கு கல்வி நிறுவனத்தின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. பனி மீன் வகையைச் சேர்ந்த இவை, இமாலயப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகவும் விருப்பமான உணவாகும்.

ஆனால், தற்போதைய மாற்றங்களால், இந்த மீன் இனங்கள் தங்களின் தற்போதைய நடப்பு இருப்பிடப் பரப்பான 16251 சதுர கி.மீ. பரப்பில் 21% அளவை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான அதிகளவு பயன்பாடு இந்த மீன்களின் அழிவுக்கு முதன்மை காரணியாய் உள்ளது. அதற்கடுத்த காரணிகளாய் மாசுபாடு, உலகளாவிய பருவநிலை மாறுபாடு, ஆறுகளில் அதிக அணைகளைக் கட்டுதல் மற்றும் கவர்ச்சியான மீன்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட காரணிகள் வகைப்படுத்தப்படுகின்றன.

கடந்த 1860ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் இமாலயப் பகுதிகளில் வெளியிலிருந்து கொண்டுவந்து அறிமுகம் செய்யப்பட்ட பழுப்புநிற மீன்களும், இந்த இயற்கையான மீன் இனங்களுக்கு நேரும் பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும் என்று கூறப்படுகிறது.