டில்லி

லகப் பொருளாதாரம் சீராக உள்ளதாகவும் நாம் மட்டும் இந்தியத் தயாரிப்பு இயக்கத்தில் சிக்கி உள்ளதாகவும் பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருவதாக உலகெங்கும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சீரமைப்புக்காகப் பல சலுகைகள்  அளித்தார். அப்போது அவர் உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி உள்ளதாகவும் இந்தியாவும் அதில் சிக்கி உள்ளதாகவும் அதை நீக்க முதலீட்டாளர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்று பங்குச் சந்தையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது. இது குறித்து பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா, “தற்போது உள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக மத்திய அரசு பலசலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காரணம் இல்லை. உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியில்  சிக்கி உள்ளதாகத் தெரிவிப்பது தவறாகும். நாம் மட்டுமே இந்தியத் தயாரிப்பு என்னும் இயக்கத்தில் சிக்கி உள்ளோம்.

உலகப் பொருளாதாரம் கடந்த 2008 அல்லது 1997-98 கால கட்டத்தில் இருந்த அளவுக்கு தற்போது இல்லை. ஓரளவு மந்த நிலை உள்ளது உண்மை எனினும் மோசமான பொருளாதார நிலையில் இல்லை. நிதி அமைச்சர் அறிவித்த அறிவிப்புக்கள் எதுவும் பொருளாதார விவகாரம் குறித்ததாக இல்லை இது முதலீட்டாளர்களுக்கானது ஆகும். இதனால் ஒரு மாதத்துக்குப் பிறகு முதலீட்டுச் சந்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இது தொடருமா என்பது சந்தேகம் ஆகும்” என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.