டில்லி

வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் மாநிலங்களில் உள்ள 50000 டன்கள் உபரி இருப்பை பயன்படுத்த மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் வெள்ளம்  ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் ஏராளமான வெங்காயப் பயிர்கள் நாசமாகின. இதனால் இந்தியாவில் பல இடங்களில் வெங்காய வரத்து அடியோடு நின்று போனது. அதையொட்டி வட இந்தியாவின் பல பகுதிகளில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி இந்த மாநிலங்களில் இருந்து வரும் வேறு பல உணவுப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளன

நேற்று டில்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.42க்கு விற்பனை ஆனது. சண்டிகரில் ரூ.45க்கும், வாரணாசி மற்றும் ஐசாவால் உள்ளிட்ட ஆறு நகரங்களில் ரூ.40க்கும்  விற்கப்பட்டது. மத்திய அரசு மதர் டைரி மற்றும் நாஃபெட் ஆகிய விற்பனை நிறுவனங்கள் மூலம் வெங்காயத்தைக் கிலோ ரூ.23.90 என்னும் விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “வெங்காயம் மற்றும் முக்கிய உணவுப் பொருட்கள் நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு  விற்பனை நிறுவனங்களான மதர் டைரி மற்றும் நாஃபெட் மூலம் வெங்காயத்தை ஒரு கிலோ ரூ.23.90க்கு விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களில் உள்ள உபரி இருப்பான 50000 டன் வெங்காயத்தைப் பயன்படுத்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.