ஸ்ரீநகர்

காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாகக்  கூறி கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்  ராஜினாமா செய்துள்ளார்.

 

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் விதி எண் 370 விலக்கப்பட்டு மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஒட்டி மாநிலம் எங்கும் கடும் அடக்கு முறை நிலவி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.   மாநிலம்  முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த செய்திகளை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கடந்த 2012 ஆம் வருடம் அருணாசலப் பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட யூனியன் பகுதிகளில்  இணைக்கப்பட்டார்.   காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர்  என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   அதையொட்டி அவர் காஷ்மீர் மாநில சிறப்புப் பணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.   தற்போது கண்ணன் கோபிநாதன் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியில்  பணி புரிந்து வருகிறார்.

நேற்று முன் தினம் தனது பதவியைக் கண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.   தனது ராஜினாமா ஏற்கப்படும் வரையில் ராஜினாமாவுக்கான காரணம் குறித்து சொல்ல முடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.    ஆயினும் அவர் தனது நண்பர்களிடம், “தற்போது காஷ்மீரில் கடும் அடக்குமுறை நிலவி வருகிறது.   அவசர நிலைச் சட்டம் இங்கு அறிவிக்கப்படவில்லை எனினும் அதைப் போலச் சூழல் காஷ்மீரில் நிலவி வருகிறது.

இது ஏமன் நாடு இல்லை. நாம் இப்போது 1970களில் வாழவில்லை. ஆயினும் அனைத்து மக்கலின் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு  யாரும் அதைக் குறித்துப் பேச   முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் முழுப் பகுதியும் தடைகள் விதிக்கப்பட்டு முடங்கி உள்ளது.  இது குறித்து என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.  எனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நான் ராஜினாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கண்ணன் கோபிநாதன், “நான் எனது எதிர்கால திட்டம் குறித்து தற்போது எதுவும்யொசிக்கவில்லை. ஆனால் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மக்கள் இந்த  அறிவிக்கப்படாத அவசர நிலைச் சட்டத்தை நான் எதிர்த்தேனா எனக் கேட்டால் அதை எதிர்த்து எனது பதவியை நான் ராஜினாமா செய்தேன் எனப் பெருமையுடன் சொல்லுவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.