கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி  தோல்வி அடைந்தது. அத்துடன் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயன்றார். அதுவும் தோல்வி அடைந்தது. கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக முன்னேற்றம் அடைந்தது.

தற்போது மூன்று மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. கலியாகஞ்ச், காரக்பூர் மற்றும் கரீம்புர் ஆகிய தொகுதிகளில்  நடைபெற உள்ள இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவிடம் இந்த கூட்டணிக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கலியா கஞ்ச் மற்றும் காரக்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. கரீம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி இடுகிறது. மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா  பானர்ஜி பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், “நாங்கள் பாஜகவை எதிர்ப்பதற்காக திருணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாது” எனத் தெரிவித்தார்.